Tue. Jul 7th, 2026 18:00:49
இலங்கை

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 13ஆம் திகதி ஆரம்பம்

admin - June 10, 2026

மட்டக்களப்பு – களுதாவளையில் அமைந்துள்ள சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

உற்சவம் ஜூன் 22ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு ஆனி உத்தர நட்சத்திரத்தில் நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

திருவிழா நாட்களில் கூட்டுப் பிரார்த்தனை, மேளவாத்தியக் கச்சேரி, சமய நிகழ்ச்சிகள், ஸ்தாபனாபிஷேகம், வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி வீதிவலம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதேவேளை, ஜூன் 21ஆம் திகதி இரவு இறுதிநாள் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மாம்பழத் திருவிழாவும், ஜூன் 22ஆம் திகதி காலை திருப்பொற்சுண்ணம் மற்றும் திருப்பொன்னூஞ்சல் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

மேலும், உற்சவக் காலம் முழுவதும் களுதாவளை பொதுமக்களின் ஆதரவுடன் இந்து இளைஞர் மன்றத்தினரால் தினமும் அன்னதான நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் பங்கேற்கும் அடியார்கள் அனைவரும் ஆசாரசீலர்களாகவும், கலாசார மரபுகளுக்கு ஏற்ற உடையணிந்தும் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற்றிடுமாறு ஆலய நிர்வாகம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது. அதேவேளை, வருகை தரும் பக்தர்கள் தங்களது உடைமைகளின் பாதுகாப்பைத் தாங்களே உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், ஜூன் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் உற்சவகால ஆலய வீதிக்கடைகள் ஏலத்தில் விடப்படவுள்ளன. கடைகளைப் பெற விரும்புவோர் ஏலத்தில் பங்கேற்று உடனடியாக பணம் செலுத்தி அன்றே பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.