Tue. Jul 7th, 2026 18:00:19
கல்முனை

பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலைக்கு இசைக்கருவிகள் கொள்வனவுக்கான உதவும் பொற்கரங்கள் நிதி உதவி

admin - June 15, 2026

பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் மற்றும் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், இசைக்கருவிகளை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி, உதவும் பொற்கரங்கள் கனடா அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது.

அறநெறிப்பாடசாலை அதிபர் திரு லக்குணம் அவர்கள் விடுத்திருந்த வேண்டுகோளின் அடிப்படையில், குறித்த நிதி நேற்று (14) பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில், உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் திரு என். சௌவியதாசன், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு கன. வரதராஜன் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் திரு கா. சாந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு நிதியை கையளித்தனர்.

உதவும் பொற்கரங்கள் அமைப்பின் பணிப்பாளர் திரு விசு கணபதிப்பிள்ளை அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கல்வி மற்றும் மாணவர் மேம்பாட்டை முன்னிறுத்தி பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சமூகநலப் பணிகள் பாராட்டுக்குரியவையாக அமைந்துள்ளன.