Tue. Jul 7th, 2026 18:00:17
இலங்கை

உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு மூன்று வருடங்களாகியும் பரிபாலன சபை நியமிக்கப்படவில்லை – இந்து அமைப்புகள் ஆர்வலர்கள் கவலை!

admin - May 22, 2026

( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு மூன்று வருடங்களாகியும்  பரிபாலன சபை நியமிக்கப்படவில்லை. அதனால் அங்கு பல்வேறு பட்ட நிருவாக நடைமுறைப் பிரச்சினைகள் நிலவி வருகின்றன என்று அம்பாறை மாவட்ட இந்து அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அங்கு கடந்த வாரம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது.

குரங்குகளின் தொல்லை அதீதமாக காணப்படுகிறது. தனியே மரபுவழி வண்ணக்கர் ஒருவரால் இப் பாரிய ஆலயத்தை தன்னந்தனியாக நின்று பரிபாலனம் செய்ய முடியாது.

இதேவேளை ,இனி மகா கும்பாபிஷேகத்தை எதிர்கொள்கின்ற காலம். இந்த வேளையில் முறையான ஒரு பரிபாலன சபை இல்லாதது மேலும் பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என நம்பப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உகந்தை முருகன் ஆலயத்துக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டமானது லகுகல பிரதேச செயலாளர் என் .நவநீதராசா  தலைமையில்  (09.06.2023)   லகுகல பிரதேச செயலக  கலாசார மண்டபத்தில் காலை முதல் மாலை வரை சுமார் 06 மணிநேரமாக இடம்பெற்றது.

அந் நிகழ்விற்கு ஆன்மிக அதிதியாக உகந்தை முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள், பொத்துவில் விகாராதிபதி, பிரதம அதிதியாக அப்போதைய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  வே.ஜெகதீசன் பிரதம அதிதியாக  கலந்து கொண்டிருந்தார்.

 பாணமை தொடக்கம் கழுவாஞ்சிகுடி வரையிலானவர்கள் வருகை தந்திருந்தும்  இந்த தேசத்து ஆலயத்திற்கென சிறப்பான முறையில் நிர்வாகத் தெரிவை மேற்கொள்ள முடியாமல் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது.

அன்று இவ் ஆலய பரிபாலனத்தை லாகுகல பிரதேச செயலரிடம் தற்காலிகமாக கையளிக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை இந்த பெரிய ஆலயத்திற்கு முறையானதொரு பரிபாலன சபையை அமைக்க முடியாதவர்களாக இந்து கலாசார திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் காணப்படுகின்றன.

எனவே மிக விரைவில் ஆடிவேல் விழா உற்சவம் மற்றும் கதிர்காம பாதயாத்திரை நடைபெறவிருப்பதால் அந்த ஆலயத்திற்கு முறையானதொரு பரிபாலன சபையை அமைத்து ஆலயம் சிறக்க வழி செய்யுமாறு இந்து அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.