September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சாய்ந்தமருதில் போக்குவரத்து சட்ட விதிகளை மீறியவர்களின் 33 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

சாய்ந்தமருதில் போக்குவரத்து சட்ட விதிகளை மீறியவர்களின் 33 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

பாறுக் ஷிஹான்

வீதி பொது போக்குவரத்து சட்டங்களை  மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக   சாய்ந்தமருது  பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகரப்பகுதி உட்பட புறநகர் பகுதிகளில்  இன்று(20)  விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது  மோட்டார் சைக்கிள் ஆவணம்  காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது   தலைக்கவசம் அணியாது செல்வது , ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது , அதிவேகமாக செல்வது ,மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள்  தொடர்பில்  தலைக்கவசம் இன்றியும்  சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இன்றி பயணித்தமை   உள்ளிட்ட  பொது  போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 33 க்கும் மேற்பட்ட  மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதனை ஓட்டிய சந்தேக நபர்கள்  சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சாய்ந்தமருது  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய   பொது போக்குவரத்து சட்டங்களை  மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது  பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மேலும் இச்சோதனை நடவடிக்கையானது   கிழக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான  பிரதி பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேத முல்லவின் பணிப்புரைகமைய  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார்   வழிகாட்டுதலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர்   டி.எஸ்.இந்திக  தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன் இவ் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரைகள்  சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழங்கியதுடன் சட்ட நடவடிக்கைகாக கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பல்வேறு பிரிவில் உள்ள பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.