Tue. Jul 7th, 2026 16:44:07
இலங்கை

உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடர் கொடுப்பனவு வழங்குவதில் இழுபறி – உடன் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முகாமைத்து சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கம் கோரிக்கை…!!

admin - May 20, 2026

செல்லையா பேரின்ப ராசா 

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் தமது அவசர தேவைக்காக இடர்கால கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாது திண்டாடுவதாக கவலை தெரிவிக்கின்றனர். 

அரச உத்தியோகத்தர்களின் இடர் தேவைகளை கருத்திற் கொண்டு மிகக் குறைந்த வட்டி வீதத்தில் கடன் தொகையினை அரசு வழங்குகிறது.

அதி உச்சமாக ரூபா 250,000/- ஆக இருந்த தொகை நாணய பெறுமதி இறக்கத்தை கவனத்திற் கொண்டு ரூபா 400,000/- உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும் கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட சில பிரதேச சபைகள், போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் குறித்த கடன் வசதியினை கோரும் உத்தியோகத்தர்களை  வழங்க முடியாத நிலமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்னும் சில சபைகள் ரூபா 200,000/- அல்லது ரூபா 250,000/- என குறைத்து வழங்குவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

இதனால் இங்கு கடமையாற்றும் பணியாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் மிகவும் கஸ்டப் படுகின்றனர்.

இதற்குக் காரணம் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் சபை வருமான நிதியிலிருந்து இக்கடன் வசதியை வழங்க வேண்டும் என்ற நியதி காணப்படுகின்றமையாகும்.

ஆனால் கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட இனிய அரசர் நிறுவனங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உடற்கடன் கொடுப்பனவுகள் அனைத்தும் மாகாணத்துறை சிறியிலிருந்து ஒதுக்குடு செய்யப்படும் நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது இந்த நிலையில் உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் இது விடயத்தில் பாராபட்சம் காட்டப்படுகின்றமையானது வேதனை அளிப்பதாக ஊராட்சி மன்றங்களில் கடமையாற்றும் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த அவல நிலையை போக்கும் வகையில்,  இவர்களுக்கு தேவையான இடர் கடன் வசதியை வழங்குவதற்கான நிதியினை மாகாண திறைசேரியில் இருந்து வழங்க முன்வரவேண்டும் என அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 இது தொடர்பாக அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ ஜி முபாரக் செயலாளர் நாயகம் வி.பற்குணம் ஆகியோர் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.