September 5, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > 🚨 கல்முனை பாண்டிருப்பில் மர்மநபர் நடமாட்டம் – பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!

🚨 கல்முனை பாண்டிருப்பில் மர்மநபர் நடமாட்டம் – பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!

நேற்று கல்முனை பாண்டிருப்பு பகுதியில் வீடுகளுக்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்து நோட்டமிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில், குறித்த நபரை அவதானித்த வீட்டு உரிமையாளர்கள் சத்தமிட்டதையடுத்து, அவர் தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் உருவமும், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் களவு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக, அறியப்படாத நபர்கள் வீடுகளுக்குள் வருகை தரும் சந்தர்ப்பங்களில் அவர்களின் அடையாளம் மற்றும் வருகையின் நோக்கம் குறித்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது அசாதாரண நடமாட்டங்கள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைக்குட்பட்ட சிலர் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள், வீடுகளில் நடமாட்டம் இல்லாத நேரங்களை பயன்படுத்தி அத்துமீறி நுழைந்து திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை மேற்கொள்ள முயற்சிக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

எனவே, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நபர் நடமாட்டமும் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.