Tue. Jul 7th, 2026 16:44:58
இலங்கை

டிக்கோயா இரட்டை கொலை: சந்தேகநபர் தடயவியல் வைத்திய அதிகாரியிடம் ஒப்படைப்பு – வயோதிப தம்பதியினரின் உடல் கண்ணீரஞ்சலியுடன் நல்லடக்கம்

admin - May 25, 2026

ஹட்டன் டிக்கோயா நகரில் இடம்பெற்ற அதிர்ச்சி அளித்த இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, தடயவியல் வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

டிக்கோயா பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்துடன் இணைந்த குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை (21) வயோதிப தம்பதியினர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொகவந்தலாவை பெற்றோசோ பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த சந்தேகநபர் பொதுமக்களின் தகவலின் பேரில் சனிக்கிழமை (23) மாலை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னர், ஹட்டன் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவரை டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் தடயவியல் வைத்திய அதிகாரியிடம் அனுப்பி மருத்துவ அறிக்கை பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கொலைச் சம்பவத்தின் பின்னணியில், உயிரிழந்த பெண்மணியின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு கமெரா காட்சிகளின் உதவியுடன் சந்தேகநபரை அடையாளம் காண பொது மக்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர் தனது மனைவியின் சகோதரரின் வீட்டில் மறைந்து இருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் அவரது மனைவியையும் விசாரணைக்காக காவலில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், கைதான நபர் பதுளை – பசறை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்த எஸ். காளிமுத்து சத்திவேல் (85) மற்றும் அவரது மனைவி சகுந்தலாதேவி (82) ஆகியோரின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (24) டிக்கோயா தரவளை பொது மயானத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரஞ்சலியுடன் நடைபெற்றது.