Tue. Jul 7th, 2026 16:46:46
கல்முனை

கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசித் திருக்குளிர்த்தி உற்சவம் ஆரம்பம்!

admin - May 25, 2026

கல்முனை:
வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை மாநகர் அருள்மிகு கடற்கரைக் கண்ணகை அம்மன் ஆலயத்தின் நடப்பு பரபாவ வருடத்திற்கான வருடாந்த வைகாசித் திருக்குளிர்த்தி மகோற்சவம், இன்று (25.05.2026) திங்கட்கிழமை திருக்கதவு திறத்தலுடன் பக்திப் பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

இன்று மாலை 6.30 மணிக்கு அம்பாளின் திருக்கதவு திறக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து முதலாம் நாள் இரவுப் பூசையும், பாரம்பரிய வழக்குரைப்பாடல் பாடுதலும் ஆரம்பமாகவுள்ளன.

தொடர்ந்து வரும் நாட்களில் தினமும் பிற்பகல் 1.00 மணிக்கு விசேட பூசைகளும், மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி மற்றும் பண்ணிசை மன்றத்தினரின் கூட்டுப் பிரார்த்தனைகளும் இடம்பெறவுள்ளன.

அத்துடன் கல்முனை-3, இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நற்சிந்தனை நிகழ்வுகளும், இரவு 8.00 மணிக்கு விசேட பூசைகளும் நடைபெறவுள்ளன.

விழாவின் முக்கிய அம்சங்கள்:

  • மே 30 (சனிக்கிழமை): மாலை 4.30 மணிக்கு மங்கல உடுக்கொலியுடன் அம்மன் ஊர்வலமும், நள்ளிரவு 12.00 மணிக்கு விசேட பூசையும் இடம்பெறும்.
  • மே 31 (ஞாயிற்றுக்கிழமை): மாலை 6.00 மணிக்கு கல்யாணக்கால் வெட்டுதல் நிகழ்வும், இரவு 10.00 மணிக்கு கல்யாணக்கால் அலங்காரப் பூசையும் நடைபெறும். அன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு ஆலய பரிபாலன சபையின் தலைமையில், இளைஞர்களின் ஆதரவுடன் கலை, கலாசார நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும் நடத்தப்படவுள்ளன.
  • ஜூன் 01 (திங்கட்கிழமை): மாலை 6.00 மணிக்கு விநாயகப்பானை வீதி வலம் வரல், இரவு 8.00 மணிக்கு வடைக்குத்துதல், இரவு 11.00 மணிக்கு கல்யாணக்கால் அலங்காரப் பூசையுடன் கண்ணகை வழக்கரை பாடி நிறைவு செய்தல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறும்.
  • நிறைவு விழா மற்றும் அன்னதானம்:
    ஜூன் 01ஆம் திகதி நள்ளிரவு (அதாவது ஜூன் 02 அதிகாலை 01.00 மணிக்கு) பொங்கல் ஆரம்பிக்கப்பட்டு, வைகறை 4.00 மணிக்கு சினம்பொலி, மங்கல் உடுக்கொலியுடன் அம்மன் குளிர்த்தி செய்யப்பட்டு திருக்குளிர்த்தி விழா இனிதே நிறைவுபெறும். திருக்குளிர்த்தி நிறைவுற்றதும் பொதுமக்களின் ஆதரவுடன் மாபெரும் அன்னதானம் வழங்கப்படும்.
    இவ்விழா காலங்களில் கிழமைநாட்களில் கிழக்கு இலங்கைச் சொற்பொழிவாளர் ஒன்றியத்தினரால் ஆன்மீகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படவுள்ளன. மேலும், ஆலயத்தில் நடைபெறும் அனைத்துக் கிரியைகளும் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் (YouTube) தளம் ஊடாக நேரலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    இவ்வுற்சவத்தினை முன்னால் பூசகர் பூ. தம்பிப்பிள்ளை (நம்பியார்) அவர்களின் ஆசிகளுடன், முதன்மைப் பூசகர் சிவஸ்ரீ. சின்னத்தம்பி கிருபைராஜா மற்றும் இரண்டாம் பூசகர் திரு. பெரியதம்பி பாக்கியராசா ஆகியோர் நடாத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கல்முனை-3, ஸ்ரீ தரவைச் சித்திவிநாயகர் மற்றும் அருள்மிகு கடற்கரைக் கண்ணகையம்மன் ஆலயங்களின் பரிபாலன சபையினர் மேற்கொண்டுள்ளனர்.