September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > 15 ஆண்டுகளாக தொடரும் சமூகப்பணி: மல்வத்தை விபுலானந்தாவுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்!

15 ஆண்டுகளாக தொடரும் சமூகப்பணி: மல்வத்தை விபுலானந்தாவுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்!

(வி.ரி. சகாதேவராஜா)

அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம் (AusKar – ஒஸ்கார்) தனது தொடர்ச்சியான சமூகப் பணித் திட்டங்களின் ஒரு பகுதியாக, சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட மல்வத்தை விபுலானந்த மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்காக ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.

கல்வி, விளையாட்டு, சமூக நலன் மற்றும் மனிதாபிமான உதவிகள் ஆகிய துறைகளில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஒஸ்கார் அமைப்பு, தாயகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருகின்றது.

இந்நிகழ்வு கடந்த ஜூன் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை மல்வத்தை விபுலானந்த மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபர் எஸ். ரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

ஒஸ்கார் அமைப்பின் தலைவர் ரத்தினசிங்கம் பிரதீபராஜ் அவர்களின் வழிநடத்தலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில், அவுஸ்திரேலியாவிலிருந்து விசேடமாக வருகை தந்த ஒஸ்கார் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரும், பொருளாளரும், இணைப்பாளருமான தம்பியப்பா கணேசநாதன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

பாடசாலையின் பிரதி அதிபர் ஆர். இரத்னகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இத்திட்டத்திற்கு ஒஸ்கார் அமைப்பின் போஷகரும் பொறியியலாளருமான வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் முழுமையான அனுசரணையை வழங்கியிருந்தார்.

நிகழ்வின் பிரதம அதிதியாக ஒஸ்கார் அமைப்பின் பிரதிநிதியும், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும், பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா கலந்து கொண்டார். அவரது கரங்களால் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஆர்.எம். ஜனோபர், நலன்விரும்பி இரா. தவராஜா, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விச் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கும், கிராமப்புற மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கும் இவ்வாறான உதவிகள் பெரும் ஊக்கமாக அமையும் என பாடசாலை நிர்வாகம் நன்றியுடன் தெரிவித்தது.

குறிப்பாக, அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம் (AusKar) கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக காரைதீவு மட்டுமன்றி அம்பாறை மாவட்டத்தின் பல தமிழ் கிராமங்கள், பொலன்னறுவை மாவட்டப் பகுதிகள் மற்றும் பூண்டுலோயா உள்ளிட்ட மலையகப் பிரதேசங்களிலும் கல்வி, சுகாதாரம், வாழ்வாதார மேம்பாடு, மாணவர் உதவித்தொகைகள், பாடசாலை அபிவிருத்தி மற்றும் அவசர மனிதாபிமான உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் தொடர்ச்சியாக பங்களித்து வருவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக ஒஸ்கார் அமைப்பின் இந்த சேவையும் அமைந்துள்ளது.