Tue. Jul 7th, 2026 16:46:05
இலங்கை

மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த ஓர் உன்னத சமூக சேவகரை இழந்து விட்டோம்; அப்துல் சமத் மறைவுக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அனுதாபம்.!

admin - June 15, 2026

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஏ.கே. அப்துல் சமத் அவர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் முன்னின்ற ஒரு உன்னத சமூக சேவகவராகத் திகழ்ந்தார் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவர் கலாநிதி ஏ.எம். ஜெமீல் தெரிவித்துள்ளார்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஏ.கே. அப்துல் சமத் அவர்களின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில்
கலாநிதி ஏ.எம். ஜெமீல் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

சகோதரர் அப்துல் சமத் அவர்கள் தனது சொந்த பொருளாதாரங்களை தமது பிரதேச மக்களுக்காக மிகவும் விருப்பத்துடன் செலவிட்டு வந்த ஓர் உன்னத மனிதராவார். தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல் மக்கள் சேவைக்காகவே அள்ளிக் கொட்டியவர்.

எப்போதும் எல்லோருடனும் சிரித்த முகத்துடன் அன்பாகவும் பண்பாகவும் பழகி வந்த சகோதரர் அப்துல் சமத் அவர்கள் வறிய மக்களின் வாழ்வாதார விடயங்களிலும் ஊரின் அபிவிருத்தி விடயங்களிலும் மிகவும் கரிசனை கொண்டு துடிப்புடன் செயலாற்றி வந்திருக்கிறார்.

அந்த வகையில் மத்திய முகாம் மற்றும் கொலனிப் பகுதி மக்களுக்கு சகோதரர் அப்துல் சமத் அவர்களின் மறைவு என்றும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகவே இருக்கும்.

அவர் எனது அரசியலுக்காக எப்போதும் தோல் கொடுத்து, ஒத்துழைப்பு வழங்கிய ஓர் உற்ற நண்பனாகத் திகழ்ந்ததை என்னால் மறக்க முடியாது. அவரது திடீர் மறைவு மிகவும் கவலையையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது பிரிவு என்பது சாதாரணமாக கடந்து செல்ல முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு மேலான சுவனத்தை வழங்குவானாக. ஆமீன்.