Tue. Jul 7th, 2026 16:46:46
இலங்கை

எல்லே கார்னிவல் மகளிர்  போட்டி இன்று ஆரம்பம்; நாளை இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும்!!

admin - June 27, 2026

( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு 2003 சாதாரண தர மற்றும் 2006 உயர்தர பழைய மாணவர் குழுவினரின் ஏற்பாட்டில், “ELLE Carnival Women’s Trophy 2026 – Season 02” எனும் மகளிர் எல்லே விளையாட்டுப் போட்டி இன்று 27ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் நாளை  28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையில் , காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

நாளை(28) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் ஒன்றியத் தலைவர் யூ.துஷான் தலைமையில் நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சில.ஜெகராஜன் உள்ளிட்ட அதிதிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மகளிர் விளையாட்டு, வீராங்கனைகளின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்வு, பெண்களின் ஆற்றல், ஒற்றுமை மற்றும் பாரம்பரிய விளையாட்டு மரபுகளை முன்னிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“Grace, Strength, Passion – This is ELLE” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்தப் போட்டி, பெண்களை வலுப்படுத்துதல், குழு உணர்வை வளர்த்தல், பெருமையுடன் போட்டியிடுதல் மற்றும் விளையாட்டின் மூலம் ஒற்றுமையை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களையும் கொண்டுள்ளது.

“Tradition in our Roots, Victory in our Hands” மற்றும் “One Team, One Spirit, One Goal – Victory!” என்ற முழக்கங்களுடன் நடைபெறும் இந்த விழா, காரைதீவு மற்றும் சுற்றுவட்டார மகளிர் எல்லே விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய ஊக்கத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல அணிகள் பங்கேற்கும் இந்த மகளிர் எல்லே திருவிழாவைக் காண விளையாட்டு ரசிகர்கள் பெருமளவில் வருகை தருமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.